Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனிமேலாவது தங்கள் தவறுகளை திருத்தி கொள்ளுங்கள் -சசிகலா

இனிமேலாவது தங்கள் தவறுகளை திருத்தி கொள்ளுங்கள் -சசிகலா
, புதன், 6 டிசம்பர் 2023 (19:53 IST)
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி மிகவும் துன்பப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை காக்க தவறிய திமுக தலைமையிலான அரசு எந்தவித நிவாரண பணிகளையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக அடிப்படை தேவையான குடி தண்ணீர், உணவு, ஆவின் பால் கூட கிடைக்காமல் மக்கள் பரிதவிக்கிறார்கள். சென்னையில் உள்ள மக்கள் புயல் மழையால் ஏற்கனவே பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருளான பால் கிடைக்காமல் ஒரு லிட்டர் ஆவின் பால் 150 ரூபாய்க்கு வாங்குகிற அவல நிலை நிலவுகிறது. இத்தகைய பகல் கொள்ளை நடப்பதை திமுக தலைமையிலான அரசு தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன்? என்று தெரியவில்லை. திமுகவினருக்கு இதில் மிகப்பெரிய பங்கு இருப்பதாகத்தான் பொதுமக்கள் கருதுகின்றனர். இதுபோன்று தமிழக மக்களின் அவல நிலையை பயன்படுத்தி திமுகவினர் ஆதாயம் தேடுவது மிகவும் கொடுமையானது.

புயல் மழையால் மக்களை காப்பாற்றவேண்டிய நேரத்தில் அவர்களிடமிருந்தே பகல் கொள்ளை நடப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக தலைமையிலான அரசு புயல் மழை எச்சரிக்கை வந்தவுடன் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக சோழிங்கநல்லூர், மாதவரம் ஆகிய பகுதிகளில் உள்ள பால் குளிரூட்டும் மையங்களில் தமிழகத்திற்கு தேவையான அளவுக்கு ஆவின் பால் இருப்பு வைத்து அதனை தற்போது மக்களுக்கு தட்டுபாடில்லாமல் கிடைக்க வழிவகை செய்திருக்கலாம். இதனை செய்யாமல் தற்போது இருமடங்கு விலையில் ஆவின் பால் விற்பனை நடப்பதை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சென்னையில் பல்வேறு இடங்களில் இன்னும் மழைநீர் அகற்றப்படாமல், மின்சாரம் கொடுக்காமல், குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் மக்கள் அல்லல்படுகின்றனர். வயது முதிர்ந்தவர்கள், சிறியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு அரசு செயல்படுகிறதா? என்பதே தற்போது சந்தேகமாக இருக்கிறது. மேலும், சில இடங்களில் மக்களை கூப்பிட்டு வந்து ஒரு பள்ளியில் தங்கவைத்து விட்டு உணவு கூட அளிக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை என்றும், தங்கள் வீடுகளில் உள்ள மழை நீரை இதுவரை அகற்றவில்லை என்ற விரக்தியால் பல்வேறு இடங்களில் மக்கள் சாலையில் அமர்ந்து போராடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபடுகின்ற அப்பாவி மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்காமல் அவர்களை காவல்துறையினரை வைத்து விரட்டி அடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளும் அளிக்கப்பட்டன.

குடிநீர் தேவைப்படும் பகுதிகளில் லாரிகளில் குடிநீர் எடுத்து சென்று விநியோகம் செய்யப்பட்டது. உணவு, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. மேலும், வெள்ள நீர் சூழ்ந்து வீடுகளில் இருந்து வெளியே வர இயலாத பெண்களுக்கு நாப்கின்கள் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், இன்றைய திமுக தலைமையிலான ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் படும் கஷ்டங்களை பார்க்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது. எனவே, திமுக தலைமையிலான அரசு இனிமேலாவது தங்கள் தவறுகளை திருத்தி கொள்ளுங்கள். மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் உள்ள வெள்ள நீரை ராட்சத மின் மோட்டார்களை வைத்து போர்க்கால அடிப்படையில் விரைந்து அகற்ற வேண்டும். பிரசவத்திற்காக மருத்துவ உதவி தேவைப்படும் கர்ப்பிணி பெண்களை கண்டறிந்து அவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனே வழங்கிடவேண்டும்.மேலும், பாதிக்கப்பட்ட  மக்களுக்கு தேவையான குடிநீர் உணவு, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்''என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் முக்கிய அறிவிப்பு