தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தது முதல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் அறநிலையத்துறை கோவில் சொத்துகளை மீட்பது, தமிழில் அர்ச்சனை என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் பலர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர், இதற்கு பலரும் ஆதரவையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், தமிழில் வழிபாடு என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. விளம்பரத்திற்காக தற்போது திமுக செயல்படுத்துகிறது. இருப்பினும் இதனை நாங்கள் வரவேற்கிறோம்” என்று கூறியுள்ளார்.
மேலும் “மத்திய அரசின் நடைமுறைகளால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதில் மாநில அரசின் சாதனை எதுவும் இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.