அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே திமுகவில் இணைந்துள்ளார் அன்வர் ராஜா.
அதிமுக கட்சியின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த அன்வர் ராஜா, அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். சமீபத்தில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி அமைந்த நிலையில் அதில் அன்வர் ராஜாவுக்கு உடன்பாடு இல்லாமல் இருந்ததாக கூறப்பட்டு வந்தது. சமீபமாக அதிமுக தலைமைக்கும், அன்வர் ராஜாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்ட நிலையில் அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்த நிலையில்தான் அன்வர் ராஜாவை கட்சியை விட்டு நீக்குவதாக அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இது அதிமுகவினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த அதிர்ச்சி மறைவதற்கு, அறிவாலயம் சென்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அன்வர் ராஜா “அதிமுக தனது கொள்கையில் இருந்து விலகி பாஜகவின் கையில் சிக்கியுள்ளது. பாஜக ஒரு நெகட்டிவ் சக்தி. அதை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். 3 முறை பேட்டி அளித்த அமித்ஷா ஒருமுறை கூட எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் என சொல்லவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ நான் தான் போரை நிறுத்தினேன் என்று சொல்லும் ட்ரம்ப் போல நான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என பேசிக் கொண்டிருக்கிறார்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K