அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் அமைப்பு செயலாளராகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அன்வர் ராஜா, இன்று திமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை அடுத்து, எடப்பாடி பழனிசாமி இந்த உத்தரவை பிறப்பித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததில் அன்வர் ராஜா அதிருப்தியில் இருந்ததாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த அதிருப்தியின் காரணமாக அவர் திமுகவில் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும், இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முறைப்படி திமுகவில் இணையவிருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து, அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் திமுகவில் இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.