அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்க பாஜக மேலிடம் திட்டமிட்டு இருப்பதாகவும், இதனை அடுத்து அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்கு கேபினட் அந்தஸ்தில் உள்ள ஒரு அமைச்சர் பதவி கொடுக்க இருப்பதாகவும் பாஜக வட்டாரங்களில் இருந்து கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை சமீபத்தில் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும் என்றும், அவருக்கு ஒரு பெரிய பதவி காத்திருக்கிறது என்றும் அமைச்சர் ஏற்கனவே கூறியுள்ளார்.
இந்த நிலையில், அடுத்த கட்டமாக அண்ணாமலையை ராஜ்யசபா எம்பியாக பாஜக மேலிடம் திட்டமிட்டிருப்பதாகவும், ஆந்திர மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக அண்ணாமலை தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தெலுங்கு தேச கட்சியுடன் மத்திய பாஜக தலைமை இதுகூறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ராஜ்ய சபா பதவி வழங்கப்பட்டவுடன் அண்ணாமலைக்கு கேபினட் அந்தஸ்தில் உள்ள அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. தமிழக பாஜக தலைவராக மட்டுமே இருந்த அண்ணாமலையை சிலர் பதவியில் இருந்து நீக்க வைத்த நிலையில், தற்போது அதைவிட மிகப்பெரிய பதவி அவருக்கு காத்திருக்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.