Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

anbhumani
, வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (14:29 IST)
தமிழ்நாட்டில் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் திட்டத்தின்படி, கடந்த இரு ஆண்டுகளாக ஓர் அரசு பள்ளி கூட தரம் உயர்த்தப்படவில்லை. நடப்பாண்டிற்கான மானியக் கோரிக்கையிலும் இதுகுறித்து அறிவிக்கப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது!

தமிழ்நாட்டில் கல்விக்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டம் முதன்மையான பங்காற்றுகிறது. 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டால், அவற்றின் பயன்கள் அத்துடன் நின்றுவிடுவதில்லை. தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலைப்பள்ளிகளை ஈடுசெய்ய  100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக்கப்படும். அதே எண்ணிக்கையில் தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக்கப்படும்.  நிறைவாக 100 தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படும். அதன்மூலம் கல்விக்கட்டமைப்பு விரிவாக்கப்படும்!

பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நிலையிலும் 100 பள்ளிகள் புதிதாக உருவாக்கப்படும். அவற்றுக்காக புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இது கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகப்பெரிய மறுமலர்ச்சியை  ஏற்படுத்தும். இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டிருந்தால்,  கடந்த இரு ஆண்டுகளில்  பலநூறு புதிய பள்ளிகள் உருவாக்கப்பட்டிருக்கும்.  அது கிராமப்பகுதிகளில் கல்வி வளர  வகை செய்திருக்கும். இத்தகைய  சிறப்புமிக்கத் திட்டத்தை கைவிட்டு விடக்கூடாது!

பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவது புதிய அறிவிப்புகள் வராதது ஒருபுறம் இருக்க, 2020-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 165 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக  தரம் உயர்த்தும் திட்டம் மூன்று ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படவில்லை. எனவே,  ஒவ்வொரு நிலையிலும் குறைந்தது 200 பள்ளிகளையாவது தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 165 பள்ளிகளையும் தரம் உயர்த்த வேண்டும்! என்று தெரிவித்து, முதல்வர் முக.ஸ்டாலினுக்கு இந்த அறிக்கையை டேக் செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் கணவரை தொழிலதிபர் ஆக்கினேன், என் மகள் அவர் கணவரை பிரதமர் ஆக்கினார்: அக்‌ஷதா மூர்த்தி