4 தொகுதிகளுககான இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடக்க இருக்கையில் திருப்பரங்குன்றம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் அன்பிச்செழியன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 29 ஆம் தேதி முடிகிறது. இந்நிலையில் இத்தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அமமுக ஆகியக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இன்னமும் அதிமுக தலைமையிலான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் 4 தொகுதிகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் பிரபல தயாரிப்பாளரான அன்புச்செழியன் களமிறங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் அதிமுக தலைமையிடம் விருப்பமனுத்தாக்கல் செய்துள்ளார்.
அன்புச்செழியன் பிரபல தயாரிப்பாளர் அசோக்குமார் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரைக் கைது செய்யாமல் அதிமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் தடுத்ததாகவும் அப்போது குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து வெகு காலமாக வெளியில் தலைக்காட்டாமல் இருந்த அன்புச்செழியன் இப்போது இடைத்தேர்தலில் களமிறங்குகிறார்.