தமிழகத்தில் உதயநிதி முதல்வராகவும் முடியாது, இந்தியாவில் ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது என திருநெல்வேலியில் நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் அமித்ஷா பேசியுள்ளார்.
நெல்லையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அமித் ஷா தனது உரையில், “தி.மு.க. கூட்டணியின் ஒரே நோக்கம் உதயநிதியை முதலமைச்சராக்குவதுதான். அதுபோலவே, சோனியாவின் ஒரே லட்சியம் அவரது மகன் ராகுலை பிரதமராக்குவதுதான். ஆனால், தமிழக மக்களை மேம்படுத்துவதே பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியின் இலட்சியம். ஆனால் உதயநிதி ஒருபோதும் முதலமைச்சராக முடியாது, ராகுல் ஒருபோதும் பிரதமராக முடியாது” என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் டாஸ்மாக், போக்குவரத்து, கனிம வளம் என தி.மு.க.வின் ஊழல் பட்டியல் நீள்கிறது. அமைச்சர்கள் சிறையில் இருந்தாலும் பதவியில் நீடிக்கிறார்கள். சிறையில் இருப்பவர்கள் ஆட்சியை நடத்தலாமா?" என்று கேள்வி எழுப்பினார்.
வரும் தேர்தலில் தி.மு.க.வை வேரறுங்கள். தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை அமைப்போம்" என்று அமித் ஷா தொண்டர்களிடையே முழக்கமிட்டார்.