தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ம் தேதி மக்களை சந்திக்க கரூருக்கு சென்றபோது அவரை பார்ப்பதற்காக பல ஆயிரம் மக்கள் கூடினார்கள். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இது தொடர்பாக விசாரணை செய்ய தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஒருபக்கம், விஜய் வேண்டுமென்றே என்று கரூர் கூட்டத்திற்கு தாமதமாக வந்தார்.. நிர்வாகிகள் சரியான ஏற்பாடு செய்யவில்லை என பல குற்றச்சாட்டுகளையும் திமுகவினர் வைத்தார்கள்.
ஒருபக்கம் தமிழக அரசு அமைத்த விசாரணை குழுவில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என சொல்லி தவெக தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகி சிபிஐ விசாரணை கேட்டது, அதை ஏற்று நீதிமன்றமும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. கடந்த இரண்டு மாதங்களாகவே சிபிஐ அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு பலரிடமும் விசாரணை நடத்தி பல தகவல்களையும் சேகரித்தார்கள். கடந்த சில நாட்களாகவே ஈரோடு கரூர் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் போன்ற தவெக நிர்வாகிகள் மற்றும் விஜயின் பிரச்சார வாகனத்தை ஓட்டிய டிரைவர் அஜித் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி அவர்களை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்.
இதைத்தொடர்ந்து தன்னையும் விசாரணைக்கு அழைப்பார்களா என்கிற சந்தேகம் விஜய்க்கு வந்ததாக சொல்லப்பட்டது. விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பிருப்பதாக பலரும் சொல்லி வருகிறார்கள். இந்நிலையில்தான் விஜயின் வாகனத்தை ஒட்டிய கார் டிரைவர் அஜித்தின் வாக்குமூலம் விஜய்க்கு எதிராக அமைந்திருப்பதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது.
விஜய் ஏன் தாமதமாக வந்தார்? குறிப்பிட்ட இடத்தில் போலீசார் வாகனத்தை நிறுத்த சொல்லியும் ஏன் அதைக் கேட்காமல் விஜய் உள்ளே வந்தார்?.. அவரை அப்படி போக சொல்லியது யார்?.. மக்கள் மயக்கம் அடைந்த போதும் விஜய் ஏன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்?.. அங்கு என்ன நடந்தது என்பதை விஜயிடம் சொன்னார்களா இல்லையா?.. என்கிற பல முக்கிய கேள்விகளுக்கு கார் டிரைவர் அஜித் கொடுத்த வாக்குமூலம் விஜய்க்கு எதிராக அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் கார் டிரைவர் அஜித் ஆகியோர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விஜய்க்கு சம்மன் அனுப்புவார்கள் எனத் தெரிகிறது. அநேகமாக பொங்கல் பண்டிகையின் போது விஜய் டெல்லியில் விசாரணையில் இருப்பார் என்கிறார்கள் சிலர்.