ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது 2 மகன்கள் உள்பட 11 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2011 - 2016 அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அப்போது பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்க ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரத்துடன் புகார் செய்திருந்தது. இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் முதல் குற்றவாளியாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பெயரும், இரண்டாம் குற்றவாளியாக ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் அண்ட் இன்பராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிட்டட் இயக்குனரான ரமேஷ் என்பவரும், மூன்றாம் மற்றும் 4 ஆம் குற்றவாளியாக வைத்திலிங்கத்தின் 2 மகன்கள் பிரபு மற்றும் சண்முக பிரபு பெயர்களும் என மொத்தம் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.