தி.மு.க. ஆட்சியை விமர்சிக்கும் வகையில், "சொன்னீங்களே செஞ்சீங்களா" என்ற தலைப்பிலான ஒரு வில்லுப்பாட்டு வீடியோவை அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது. புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த வில்லுப்பாட்டு வீடியோவை வெளியிட்டார்.
"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, இன்று நடந்த
பிரசாரக் கூட்டத்தில், தி.மு.க. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அளித்த பல்வேறு வாக்குறுதிகளை பட்டியலிட்டு, அவை நிறைவேற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில் "சொன்னீங்களே செஞ்சீங்களா" என்ற வில்லுப்பாட்டு வீடியோ காட்சி வடிவில் வெளியிடப்பட்டது.
மேலும், மேடையில் "துரோகச் சக்கரம்" என்ற பெயரில் ஒரு ஏமாற்று சக்கர வடிவ மாதிரி ஒன்றையும் அ.தி.மு.க.வினர் காட்சிப்படுத்தினர். இது தி.மு.க.வின் வாக்குறுதிகள் மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளன என்பதை குறிப்பதாக அ.தி.மு.க. கூறியது.
இத்துடன், தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ள ஆண்டுகளுக்கான "ரிப்போர்ட் கார்டு" என்ற பெயரில் ஒரு அறிக்கையையும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில், தி.மு.க.வின் செயல்பாடுகளுக்கு வாக்காளர்கள் போட்ட மதிப்பெண்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.