Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

Advertiesment
admk office
மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அ.தி.மு.க. ஏற்கவில்லை என்று அதிமுக அறிவித்துள்ளது. குறிப்பாக, மாநாட்டில் பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா குறித்து வெளியிடப்பட்ட வீடியோ துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அ.தி.மு.க.  தெரிவித்துள்ளது.
 
இது குறித்து அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும். பெரியாரையே இழிவுபடுத்திய கருணாநிதியின் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை. 'திராவிடத்தை அழிக்க முருகா வா' என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா? திராவிடம் என்ற கொள்கையை யாராவது அழித்துவிட முடியுமா?" 
 
"திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலான, ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டை செலுத்தி கொண்டிருக்கும் உயரிய கொள்கை நெறி. மக்களுக்கான ஒரு கொள்கையை யாரால் வீழ்த்த முடியும்? அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் திராவிடத்தை வலுவற்ற கொள்கை போல கட்டமைக்க முயலும் தி.மு.க.வின் சதிச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.
 
"பெரியார், அண்ணாவின் வாழ்வியல் உரத்தில் தழைத்தோங்கி நிற்கும் கொள்கையை, ஒரு மாநாடு சிதைத்து விடுமா என்ன? இல்லை, அப்படி நடக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுவிடுமா? அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ அ.தி.மு.க.வைச் சேர்ந்த யாரும் ஏற்கவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். அந்த மாநாட்டில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறோம்," இவ்வாறு அ.தி.மு.க. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!