அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்ட கூட்டத்தில், அதிமுக நிர்வாகிகள் இரு தரப்பினர் மோதிக்கொண்டு அடிதடிகள் இறங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பதற்கான செயல் வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உட்பட அதிமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தங்களை கூட்டத்திற்கு அழைக்காமல் புறக்கணித்து வருவதாக ஒருவர் புகார் அளித்தார். புகார் அளித்த நிர்வாகியை மேடைக்கு அழைத்து, செங்கோட்டையன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டதாகவும், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, செங்கோட்டையன், புகார் தெரிவித்தவர் அதிமுக உறுப்பினரே இல்லை என்றும், வேண்டுமென்றே பிரச்சனை செய்யும் நோக்கில் கூட்டத்திற்கு வந்ததாகவும் கூறினார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டையன் கடந்த சில மாதங்களாகவே அதிமுகவிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார் என்பதும், அதேபோல் அதிமுக விழாக்களில் பங்கேற்காமல் அவரும் புறக்கணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.