ஊத்துக்குளியில் நடைபெற உள்ள அதிமுக கூட்டத்திற்கு மக்களை அழைக்க விடுக்கப்பட்டுள்ள விளம்பரம்தான் தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்படத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் அதிமுகவும் பல்வேறு பகுதிகளில் கட்சிக் கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டு வருகிறார்.
இந்நிலையில் ஊத்துக்குளி டவுனில் தெற்கு ஒன்றிய கழகத்தின் கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பொள்ளாச்சி ஜெயராமன், கே.சி.கருப்பணன் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் கலந்துக் கொண்டு பேச உள்ளனர். இதற்காக வழங்கப்பட விளம்பர போஸ்டர்களில், கூட்டத்திற்கு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் 3 பேருக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 300 பேருக்கு குலுக்கல் முறையில் மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் உள்ளிட்ட மின் சாதனங்களும், கூட்டத்திற்கு வரும் அனைவருக்கும் சிறப்பு பரிசும் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டத்திற்கு மக்களை ஈர்க்க ஊத்துக்குளி அதிமுகவினர் செய்த இந்த விளம்பரம் தற்போது வைரலாகியுள்ளது.
Edit by Prasanth.K