நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு குறித்து பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் ஆர்.பி. உதயகுமார், திமுகவுக்கு சரியான மாற்று அதிமுக மட்டுமே என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி. உதயகுமார், “புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள், பரீட்சை எழுதாமலேயே தேர்ச்சி பெறுவோம் என நம்புகிறார்கள். அது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அவர்கள் முதலில் பரீட்சை எழுதட்டும். அதில் அவர்கள் பெறும் மதிப்பெண்களை பார்த்துவிட்டுப் பேசலாம். இப்போதுதான் விஜய் படிக்க தொடங்கியுள்ளார்” என்று கூறினார்.
மேலும் திமுகவை வீழ்த்தும் சக்தி அதிமுகவுக்கு மட்டுமே உண்டு. இது பல ஆண்டுகளாக தமிழக மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பு. அதிமுகவின் 52 ஆண்டுகால அரசியல் வரலாற்றையும், அதன் நிரந்தர வாக்கு வங்கியையும் விஜய் புரிந்துகொள்ள வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.
அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என நிரந்தர வாக்கு வங்கி கொண்ட கட்சிகளின் பட்டியலில் அதிமுக முதல் இடத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். கிளைக் கழகங்கள், தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவு என அனைத்து வகையிலும் அதிமுக வலிமையாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.