கூட்டணி கட்சிகளான பாமக, பாஜகவை விமர்சித்த அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கி ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடந்த நிலையில் எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் நுழைந்தது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் சார்பில் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து பல தீர்மானங்களை கொண்டு வந்த ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ், கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் பாமகவை அவதூறாக பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டனர். இதுதவிர கட்சி கொள்கைகளுக்கு எதிராக நடந்ததாக முன்னாள் அதிமுக எம்.பி சின்னசாமி உட்பட 15 பேர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தொலைபேசியில் பேசி அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி சசிக்கலா அரசியல் நாடகம் செய்வதாக கூறியுள்ள அவர்கள், சசிகலா அதிமுகவை ஒழிக்க செய்யும் முயற்சிகள் முறியடிக்கப்படும் என்றும், சசிக்கலாவுடன் தொலைப்பேசியில் பேசிய அதிமுகவினர் யார் என்று கண்டறிந்து அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.