பேருந்தில் பயணித்த பயணியின் குழந்தை வயதை கண்டக்டர் நம்ப மறுத்ததால், அந்த பயணி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையை சேர்ந்த இதயத்துல்லா என்பவர் தனது குழந்தை முகமது உசேனுடன் சீனிவாசபுரத்தில் இருந்து திருவாரூக்கு போக அரசு பேருந்தில் ஏறினார். கண்டக்டரிடம் 40 ரூபாய் கொடுத்து தனக்கு ஒரு டிக்கெட் வேண்டும் என்று கேட்டார்.
கண்டக்டர் உனக்கு மட்டும் டிக்கெட் எடுத்தா போதுமா உன் குழந்தைக்கும் சேர்த்து எடு என கூறினார். இதற்கு இதயத்துல்லா, என் குழந்தைக்கு இரண்டரை வயது தான் ஆகிறது எனக் கூறியுள்ளார். இதனை நம்ப மறுத்த கண்டக்டர் குழந்தைக்கு இரண்டரை வயது தான் ஆகிறது என்பதற்கான என்ன ஆதாரம் உள்ளது எனக் கேட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிப்போகவே ஒரு கட்டத்தில் கடுப்பான இதயத்துல்லா என் குழந்தைக்கு இரண்டரை வயசுன்னா நம்ப மாட்டேங்கறீங்கல்ல? சரி நான் போய் என் குழந்தையோட பிறப்பு சான்றிதழை கொண்டு வர்ரேன்ன்னு சொல்லிட்டு தன் குழந்தையை கண்டக்டரிடம் கொடுத்துவிட்டு பேருந்தில் இருந்து வேகமாக இறங்கிவிட்டார் இதயதுல்லா.
இதனால் செய்வதறியாது திகைத்த, கண்டக்டர் குழந்தையை பேரளம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு கிளம்பி சென்றார். இதனிடையே இதயதுல்லா வீட்டுக்கு சென்று சான்றிதழை எடுத்து கொண்டு பேரளம் வந்தார்.
காவல் நிலையத்திற்கு வந்த இதயத்துல்லா நடந்தவற்றை காவலரிடம் கூறி, சம்மந்தப்பட்ட நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துவிட்டு சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.