தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேருந்து கட்டணம் உயர்ந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக பின்னர் ஓரளவு கட்டணம் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து புதுச்சேரியில் இன்று முதல் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாகவும், உயர்த்தப்பட்ட கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ளூர் பேருந்து கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதை அடுத்து புதிய கட்டண விபரம் குறித்து தற்போது பார்ப்போம். புதுச்சேரி நகர பேருந்துகளில் நாளை முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 இல் இருந்து 7ஆக உயர்த்தப்படுகிறது அதேபோல் அதிகபட்ச கட்டணம் ரூ.10இல் இருந்து 14ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது
இந்த கட்டண உயர்வு ஏழை, எளிய நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கும் என்றும் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. புதுச்சேரியில் கட்டண உயர்வை எதிர்த்து நாளை முதல் அரசியல் கட்சிகள் போராட்டம் செய்யவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது