நெய்வேலி அருகே இளம்பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டிருக்கிறார் ஒருவர். இதனால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார், இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
	
	
	கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா. கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். ராதிகாவை தாய்மாமன் மகன் விக்னேஷ் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் வேறொரு இளைஞர் ராதிகாவின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அதை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இதையறிந்த ராதிகா அதிர்ச்சியடைந்தார். சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்ட அவர் இதுபற்றி யாரிடமும் சொல்லவில்லை.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	நேற்று மதியம் பெற்றோர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் மனமுடைந்திருந்த ராதிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலை வீடு திரும்பிய பெற்றோர்கள் தன் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறியழுதார்கள். இந்த சம்பவம் பற்றி ராதிகாவின் மாமன் மகன் விக்னேஷுக்கு தெரியவந்திருக்கிறது. ராதிகாவின் இழப்பை தாங்க முடியாத அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் இருவர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவதூறாக படத்தை வெளியிட்டவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.