சென்னையில் புதிய நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தி மயங்கிய இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தங்கி ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு அவருக்கு ப்ளோரிடா என்ற பெண் ஒருவர் நட்பாகியுள்ளார். இளம்பெண்ணுக்கு குடிப்பது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்கள் இருந்துள்ளது. ப்ளோரிடாவுக்கு அந்த பழக்கம் இருந்ததால் அடிக்கடி இருவரும் சேர்ந்து மது அருந்துவது வழக்கமாக இருந்துள்ளது.
கடந்த மாத இறுதியில் அவ்வாறாக இருவரும் ஒரு விடுதியில் அறை எடுத்து மது அருந்தியுள்ளனர். அப்போது ப்ளோரிடா அவரது நண்பர்கள் என இரு ஆண்களை அழைத்து வந்துள்ளார். அவர்களும் இவர்களோடு மது அருந்தியுள்ளனர். பின்னர் இளம்பெண் போதையில் மயக்கமடைந்துள்ளார்.
சில மணி நேரங்கள் கழித்து இளம்பெண் மயக்கம் தெளிந்து எழுந்தபோது நிர்வாணமாக கிடந்துள்ளார். அவர் அருகே ப்ளோரிடாவுடன் வந்த ஆண் நண்பர் ஒருவரும் நிர்வாணமாக கிடந்துள்ளார். இதனால் தான் வன்கொடுமைக்கு உள்ளானதை அறிந்த அந்த இளம்பெண் அந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன்பின்னர் தனது சொந்த ஊரான வேலூருக்கு சென்ற இளம்பெண் மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அவர் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ப்ளோரிடா மற்றும் அவரது நண்பர் மனாசே ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் மானாசேவை கைது செய்துள்ளனர்.
Edit by Prasanth.K