ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் "சென்னைக்கு மிக அருகில்" என பொய்யாக விளம்பரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு கட்டிட மனை ஒழுங்குமுறை குழுமம் (TNRERA) எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவர்ச்சிகரமான வாசகங்களுடன் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விளம்பரம் செய்து வரும் நிலையில், அதில் முக்கியமான ஒன்று "சென்னைக்கு மிக அருகே" என்ற வார்த்தையாகும். சென்னையிலிருந்து 60 கிலோமீட்டர் தூரம் இருந்தால் கூட, "சென்னைக்கு மிக அருகே" என்றுதான் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
துண்டுப் பிரசுரங்கள், அச்சுப் பிரதிநிதிகள், தொலைக்காட்சி விளம்பரங்கள், பொது இடங்கள் என இவ்வாறு தவறான தகவல்களுடன் விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என TNRERA எச்சரிக்கை விடுத்துள்ளது. விளம்பரத்தில் வீட்டு மனை அல்லது கட்டிட விற்பனை சரியாக சென்னையிலிருந்து எத்தனை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என்பதை குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், "நிபந்தனைக்கு உட்பட்டது", "பொறுப்புத் துறப்பு" போன்ற வாசகங்கள் விளம்பரங்களில் இடம்பெறக்கூடாது என்றும், விற்பனையாளர்களின் முகவரி, பெயர், தொடர்பு எண்கள் கட்டாயம் விளம்பரத்தில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பிரபலமான இடத்தை குறிப்பிட விரும்பினால், அந்த இடத்திற்கும் மனை அமைந்துள்ள பகுதிக்கும் இடையே உள்ள தொலைவை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.