தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல்களுக்கு முடிவே இல்லாமலும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேர் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுடைய படகையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. மேலும், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.