மேகாலயா மாநிலத்தில் சுமார் 4000 டன் நிலக்கரி காணாமல் போனது குறித்து எழுந்த கேள்விக்கு, அமைச்சர் ஒருவர் அளித்த பதில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாயமான நிலக்கரி தொடர்பாக உயர் நீதிமன்றம் அரசிடம் கேள்வி எழுப்பியபோது, "மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக நிலக்கரி அனைத்தும் அடித்து செல்லப்பட்டிருக்கலாம்" என்று அமைச்சர் பதிலளித்தார்.
இந்த அசாதாரண பதிலை தொடர்ந்து, மாயமான நிலக்கரி குறித்து விரிவான விசாரணை நடத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கலால் துறை அமைச்சர் கர்மன் ஷில்லா, "நிலக்கரி மாயமானதை நான் நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை. இயற்கை காரணங்களால் அது மாயமாகியிருக்கலாம் என்றுதான் கூறினேன். சட்டவிரோத நடவடிக்கைகளால் நிலக்கரி காணாமல் போனதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்று விளக்கமளித்தார்.
ஏற்கனவே மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் பரவலாக நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனங்களும் இருந்து வருகின்றன.
இந்தச் சூழலில் 4000 டன் நிலக்கரி மாயமான விவகாரம், மேகாலயா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அடுத்தகட்டமாக என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.