உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் காரணம் சமையல் உப்புதான். பல வழிகளில் உடலில் சேரும் உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் கூடினால், அடுத்தடுத்து பல பிரச்னைகள் வரும்.
காரணங்கள்:
உயர் ரத்த அழுத்தத்துக்குப் பல காரணங்கள் உள்ளன. உடலில் சேருகிற நீர், உடலில் சேருகிற உப்பு, சிறுநீரகம், நரம்பு மண்டலம், ரத்த நாளங்கள் வேலை செய்கிற விதம், ஹார்மோன்கள் வேலை செய்கிற விதம் போன்றவை முக்கியமானவை.
உயர் ரத்த அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் பக்கவாதம், அதனால் பேச்சுத் தடை, மாரடைப்பு, இதயப் பலவீனம், சிறுநீரக நோய், ஏன் மரணம்கூட ஏற்படலாம்.
உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் உள்ளவர்களுக்கு, படபடப்பு உள்ளவர்களுக்கு, அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, உப்பு, ஊறுகாய், வடகம், வத்தல் போன்றவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, குடும்பத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, புகைபிடிப்பவர்களுக்கு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கெல்லாம் ரத்த அழுத்த நோய் வரலாம்.
சிலருக்கு எந்தக் காரணத்தால் வருகிறது என்பது தெரியாது. இதை எசன்சியல் ஹைபர்டென்ஷன் என்று குறிப்பிடுவார்கள். சில நேரம் மற்ற உறுப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்பால் ரத்த அழுத்தம் அதிகமாகும்.
ஒருவருக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒன்றரை தேக்கரண்டி உப்பு போதுமானது. நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு 4 மி. கிராம் அளவைத் தாண்டினால், அது சிறுநீரகத்தை பாதிக்கும்.
கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்து சாறு எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். உணவில் அதிகளவு கறிவேப்பிலை, கீரைகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அகத்திக் கீரை, சுண்ட வத்தல் ஆகியவற்றைச் சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.
எலுமிச்சம்பழம், புதினா, கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொண்டால், உப்பின் தேவை குறையும். பசும் பாலில் 2 பல் பூண்டை நசுக்கிப் போட்டுக் காய்ச்சி இரவில் குடித்து வந்தால் ரத்தக் கொதிப்பும், கொழுப்பும் குறையும்.