உத்தரப் பிரதேசத்தின் கார்முக்தேஷ்வர் கங்கை படித்துறையில் ஒரு சடலத்துக்கு இறுதிச்சடங்கு நடத்த முயன்ற சம்பவம், அங்கு கொண்டுவரப்பட்ட 'பிணம்' பிளாஸ்டிக் பொம்மை என்று தெரியவந்ததையடுத்து பெரும் பரபரப்பானது.
உள்ளூர்வாசிகள் சந்தேகித்து துணியை விலக்கி பார்த்தபோது, பிளாஸ்டிக் பொம்மை இருப்பதை கண்டனர். உடனடியாக சம்பவ இடத்தில் இருந்த கமல் சோமானி, ஆஷிஷ் குரானா ஆகிய இருவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மற்ற இருவர் தப்பியோடினர்.
தீவிர விசாரணையில், டெல்லியை சேர்ந்த கமல் சோமானிக்கு ரூ.50 லட்சத்துக்கும் மேல் கடன் இருந்தது தெரியவந்தது. கடனிலிருந்து தப்பிக்க, அவர் தனது முன்னாள் ஊழியர் அன்ஷுல் குமாருக்கு தெரியாமல், அவரது பெயரில் ரூ.50 லட்சம் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்திருந்தார். போலியான இறப்பு சான்றிதழை பெறவே, பிளாஸ்டிக் பொம்மையை பயன்படுத்தி இறுதிச்சடங்கு செய்ய முயன்றுள்ளார்.
போலீஸார் அன்ஷுல் குமாரை தொடர்பு கொண்டபோது, அவர் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தப்பியோடிய இருவரை தேடும் பணி நடைபெறுகிறது.