”பக்ரீத் வாரத்தில் பன்றி கறி மற்றும் மாட்டு கறியை நாங்கள் டெலிவரி செய்ய மாட்டோம்” என சோமேட்டொ நிறுவனத்தின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவர், உணவை டெலிவரி செய்ய வந்ததால், அதனை வாங்க மறுத்த நபருக்கு, சோமேட்டோ நிறுவனம், “உணவுக்கு ஏது மதம், உணவே ஒரு மதம் தான்” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்தது. இதே போல் சோமேட்டோ ஒரு பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. ஆனால் தற்போது நிறுவனத்திற்குள்ளேயே எழுந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில், ”பக்ரீத் வாரத்தில் எங்களை பன்றி கறியை டெலிவரி செய்ய சொல்கிறார்கள்” என பணியாளர்கள் மத்தியில் ஒரு குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் ”சொமேட்டோ எங்கள் மத நம்பிக்கையை புண்படுத்துகிறது” எனவும் சோமேட்டோ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோமேட்டோ ஊழியர் ஒருவர் “ நாங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று நிறுவனத்திற்கு தெரியும். அதனை தெரிந்துகொண்டே எங்களை பக்ரீத் வாரத்தில், பன்றி கறியை டெலிவரி செய்ய சொல்கிறார்கள். இது எங்கள் மத நம்பிக்கையை புண்படுத்துகிறது” என கூறியுள்ளார்.
மேலும் “ ஹிந்து ஊழியர்கள் சிலர் மாட்டு கறியை டெலிவரி செய்ய மறுத்து வருகின்றனர். அவர்களையும் நிறுவனம் டெலிவரி செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தை குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர், ”சோமேட்டோ நிறுவனம் மிகவும் தவறான காரியத்தை செய்து வருகிறது. பிறரின் மத உணர்வுகளை புண்படுத்துவதை எந்த காலத்திலும் ஏற்றுகொள்ள முடியாது. சோமேட்டோ ஊழியர்களின் போராட்டம் மிகவும் நியாயமானது என கூறியுள்ளார்.