வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு வாகனத்தை வழிமறித்த யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	நேற்று இரவு 9.30 மணியளவில், மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வுகளுக்கு பிறகு, பிரியங்கா காந்தி காரில் கொச்சி விமான நிலையத்திற்கு பயணித்துக்கொண்டிருந்தார்.
 
									
										
			        							
								
																	
	 
	அந்த நேரத்தில், மன்னுத்தி பைபாஸ் சந்திப்பில், அவரது பாதுகாப்பு வாகனம் தொடர்ந்து ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், கேரளாவைச் சேர்ந்த யூடியூபர் அனீஷ் ஆபிரஹாம், தனது காரை நிறுத்தி எதிர்ப்புத் தெரிவித்தார். காவல்துறையினர் அங்கு வந்து, அவர் வாகனத்தை அகற்றுமாறு கேட்டபோதும், அவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
									
											
									
			        							
								
																	
	 
	இந்த சம்பவத்தையடுத்து, பாதுகாப்பு வாகனத்தின் போக்கினை தடுத்தது, உயிருக்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, காவல்துறையினருக்கு அமைதி குழப்பம் ஏற்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். அவருடைய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	இந்த சம்பவம் தொடர்பாக, பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் எழுப்பியுள்ளது.