மேற்கு வங்கத்தில் அரசு வழங்கிய சைக்கிளை உள்ளூர் பாஜக தலைவர் மகள் வாங்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவிற்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. கடந்த சில மாதங்களில் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த பல்வேறு மோதல்களில் பாஜகவினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேற்கு வங்கம் பிர்மம் மாவட்டத்தில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வில் சைக்கிள் பெற இருந்த உள்ளூர் பாஜக தலைவரின் மகள் தனக்கு அரசு வழங்கும் சைக்கிள் வேண்டாம் என மறுத்துள்ளார். சில நாட்கள் முன்னதாக தனது தந்தை மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக தெரிவித்த அவர் சைக்கிளை வாங்க மறுத்ததால் சைக்கிள் திரும்ப அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.