அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாக தான் கூறிய கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தனது நிபந்தனைகளுக்கு இந்தியா சம்மதிக்காவிட்டால், இந்திய பொருட்களுக்கு எதிராக "மிகப்பெரிய வரிகளை" விதிப்பதாக அவர் அச்சுறுத்தினார்.
பிரதமர் மோடியுடன் பேசியதாகவும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிறுத்தப்படும் என்றும் மோடி உறுதியளித்ததாகவும் டிரம்ப் கூறினார். ஆனால், இத்தகைய தொலைபேசி உரையாடல் நடந்ததை இந்திய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்தது.
ஏற்கனவே இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரை வரி விதித்துள்ளது. ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இந்தியா நிறுத்தவில்லை என்றால், இந்த வரி உயரும் என்று டிரம்ப் தற்போது மீண்டும் எச்சரித்துள்ளார்.
ஆனால் இந்தியாவோ டிரம்பின் எச்சரிக்கையை காதில் போட்டு கொள்ளாமல் இந்த மாதத்தில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 20% அதிகரித்து ஒரு நாளைக்கு 1.9 மில்லியன் பேரல்களாக உயர வாய்ப்புள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.