இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளதோடி, தொடர்ந்து இந்தியாவை விரோதமாக நடத்தும் ட்ரம்ப்பின் மனப்பான்மைக்கான காரணம் குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்கா - இந்தியா இடையேயான நட்புறவு தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பும், இந்திய பிரதமர் மோடியும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போன்ற நட்பைக் கொண்டிருந்தனர். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் போருக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தொடர்ந்து பாகிஸ்தானுடன் உறவு கொண்டாடும் ட்ரம்ப், இந்தியா மீது வரிகள் விதித்தும், பொதுவெளியில் இந்தியா குறித்து மோசமாக விமர்சித்தும் வருகிறார்.
இதற்கு இந்தியா சில விஷயங்களுக்கு ஒத்துக் கொள்ளாததே காரணம் என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியா - பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக ட்ரம்ப் பெருமை பேசிக் கொண்டிருந்தபோது அதை பாகிஸ்தான் ஆமோதித்து அமைதியாக இருந்தது. ஆனால் இந்தியா தொடர்ந்து ட்ரம்ப்பின் கருத்துகளை மறுத்து வந்தது. இது ட்ரம்ப்பை அதிருப்திக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு தன்னை பரிந்துரைக்க வேண்டும் என பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிடம் ட்ரம்ப் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பாகிஸ்தான் சம்மதித்து ட்ரம்ப் பெயரை சிபாரிசு செய்த நிலையில், இந்தியாவிடம் கேட்டபோது பிரதமர் மோடி மறுத்துவிட்டதாகவும், அந்த கோபத்திலேயே ட்ரம்ப் இப்படி செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வெறும் விருதுக்காக ஒரு நட்பு நாட்டை ட்ரம்ப் இப்படி நடத்தியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K