தூய்மை பணிகள் நடைபெறுவதால், நாளை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதேசி துவார தரிசனம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, நாளை காலை 7 மணி முதல் 12 மணி வரை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். அதன் பின்னர் கோவில் தூய்மைப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்ப்பகிரகம், கொடிமரம், விமான கோபுரம் ஆகியவை பச்சை கற்பூரம், பன்னீர், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு தூய்மைப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக நாளை பக்தர்கள் தரிசனம் 5 மணி நேரம் ரத்து செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாளை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே, நாளை திருப்பதி கோவிலுக்கு செல்லவிருப்பவர்கள் இதனை அறிந்து கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்