இந்தியாவின் ஜவுளித் துறைக்கு ஊக்கமளிக்கும் விதமாக, பருத்தி இறக்குமதி மீது விதிக்கப்பட்டிருந்த 11% வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த வரி விலக்கு ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை, 42 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகளால் இந்திய ஜவுளி துறைக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு, நாட்டின் ஜவுளித் துறைக்கு ஒரு பெரிய நிவாரணமாக அமையும். குறிப்பாக, பருத்தி நூற்பாலைகள், துணி உற்பத்தியாளர்கள், ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இது பெரும் உதவியாக இருக்கும். இந்த வரி விலக்கு, ஜவுளி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலையைக் குறைத்து, இந்திய ஜவுளிப் பொருட்களின் சர்வதேச போட்டித்தன்மையை அதிகரிக்கும்.
மத்திய அரசின் இந்த முடிவை இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இந்த தற்காலிக வரி விலக்கு, குறுகிய காலத்தில் துறைக்கு ஒரு ஆதரவை வழங்கினாலும், நீண்டகாலத்திற்கு இந்த வரி விலக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஜவுளித் துறையினரிடையே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.