ஒடிசாவில் அமைச்சரை காவலரே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலைக்கான காரணம் குறித்து காவலர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சரும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவருமாக இருந்து வந்தவர் நபா கிஷோர் தாஸ். முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் பின்னர் அதிலிருந்து விலகி 2019 தேர்தலில் பிஜேடி சார்பில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 29ம் தேதி ஒடிசாவின் ஜார்சுடாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற நபா கிஷோர் தாஸை பாதுகாப்பு பணியில் இருந்த கோபால் தாஸ் என்பவர் திடீரென சரமாரியாக சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக ஏஎஸ்ஐ கோபால் தாஸை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக காவலராக பணிபுரிந்து வரும் கோபால் தாஸ் இதுவரை தனது சிறந்த பணிக்காக 19 முறை பதக்கங்கள் வென்றுள்ளார். ஆனால் சமீபமாக அவர் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே உறவினர் ஒருவருக்கு அரசு வேலை ஏற்பாடு செய்வது தொடர்பாக அமைச்சர் நபா தாஸை கோபால் தாஸ் சந்தித்ததாகவும், ஆனால் வேலை வாங்கி தராததால் அவரை சுட்டுக் கொன்றதாகவும், கோபால் தாஸ் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ஒடிசாவை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.