ஒடிசாவில் பழங்குடிகள் தயாரித்த சாராயத்தை யானைகள் குடித்துவிட்டு அங்கேயே படுத்து தூங்கியதாக வெளியாகியுள்ள செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள ஷிலிபடா முந்திரி காடு பகுதியில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் இலுப்பை பூ உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மஹூவா என்ற சாராயம் காய்ச்சுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக முந்திரிகாடு பகுதியில் பெரிய பானைகளில் தண்ணீரில் இலுப்பை பூக்களை ஊற வைத்துள்ளனர்.
பின்னர் மறுநாளை காலை வந்து பார்த்தபோது பானைகள் உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதற்கு பக்கத்திலேயே 24 காட்டு யானைகள் முரட்டு தூக்கத்தில் இருந்துள்ளன. அவர்கள் அவற்றை எழுப்ப முயன்றும் அவை எழுந்திருக்கவில்லை.
அதனால் சாராயத்தை குடித்துவிட்டு யானைகள் தூங்கி கிடப்பதாக அவர்கள் வனத்துறைக்கு தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் மிகுந்த சிரமத்தின் பேரில் மத்தளம் அடித்து யானைகளை தூக்கத்திலிருந்து எழுப்பி அப்பகுதியிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
யானைகள் அந்த சாராயத்தை குடித்திருக்க வாய்ப்பில்லை என வன அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால் அவை அதை குடித்ததால்தான் போதையில் அவ்வாறு படுத்திருந்ததாக அப்பகுதி மக்கள் நம்புகிறார்களாம். இந்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.