நிலவின் தென் துருவத்திற்கு சந்திராயன் 2, என்ற விண்கலத்தை சிவன் தலையிலான இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பி சாதனை செய்திருக்கும் நிலையில் சந்திராயன் 2, விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் திடீரென காணாமல் போனது. இருப்பினும் தற்போது விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டு அதனை செயல்பட வைக்க விஞ்ஞானிகள் இரவுபகலாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் இஸ்ரோ சிவன் பெயரில் சில போலியான டுவிட்டர் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு அதில் பல்வேறு வகையிலான டுவீட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவன் அவர்களின் கவனத்திற்கு வந்தபோது அவர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
டுவிட்டரில் அதிகாரப்பூர்வமான கணக்கு எனக்கு இல்லை என்றும் எனது பெயரில் உலா வரும் கணக்குகள் போலியானவை என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார். எனவே சந்திராயன் 2 குறித்து சந்தேகம் எழுப்புபவர்கள் இஸ்ரோவின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறும், போலியான சிவன் கணக்கை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது