சென்னையில் 6 இடங்களில் விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்பட்டன. இன்று மாலைவரை சுமார் 1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை நாடு முழுவதும் சிறப்பாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் இந்த விநாயகர் சிலைகள் இன்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
அந்த வகையில் சென்னையில் திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், எண்ணூர், நீலாங்கரை உள்ளிட்ட 6 இடங்களில் விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதை பார்ப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படும்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது
விநாகர் சிலைகளை கரைக்க டிராலிகள் மற்றும் கிரேன்கள் பயன்படுத்தப்பட்டன. 7 அடி உயரம் உள்ள சிலைகள் டிராலிகள் மூலம், 7 அடிக்கும் மேல் உள்ள விநாயகர் சிலைகள் கிரேன்கள் மூலம் கரைக்கப்பட்டன. மேலும் கடலில் கரைக்கப்படும் முன் விநாகர் சிலையில் ரசாயனம் பூசப்படாமல் இருந்ததா? என்ற பரிசோதனையும் நடந்தது. ரசாயனம் பூசப்படாத விநாயகர் சிலைகள் மட்டுமே கடலில் கரைக்க அனுமதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
விநாயகர் சிலை கரைப்பு பணியில் ஏராளமான தன்னார்வலர்களும் பொதுமக்களும் ஈடுபட்டனர். சிலை கரைந்தபின் அதில் இருந்த மரக்கட்டைகள் கரையில் ஒதுங்கியபோது அவை, மீனவர்களின் உதவியால் அப்புறப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது