உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு பாட்டியும் பேரனும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாடு பேரனை முட்ட ஓடி வந்துள்ளது. அதைப் பார்த்த பாட்டி பேரனைக் காப்பாற்ற முயன்று அந்த மாட்டிடம் சிக்கி உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது.
சுமார் 70 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் தனது 4 வயது பேரனை அழைத்துக் கொண்டு வாக்கிங் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள ஒரு மைதானத்தில் அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு பாட்டி வாக்கிங் சென்று சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று ஒரு மாடு மைதானத்தினுள் நுழைந்து பேரனை தாக்க முயன்றது. இதைப் பார்த்து பதரியடித்துக்கொண்டு ஓடிவந்த பாட்டி, மாட்டை விலக்கி பேரனை காப்பாற்ற முயன்றார்.
இதனால் ஆக்ரோஷமான மாடு பாட்டியை முட்ட பார்த்தது. உடனே அந்த மாடு பாட்டியை சரமாரியாக முட்டியதில் அந்த மூதாட்டி தலையில் காயம் ஏற்பட்டு கீழே சரிந்து விழுந்தார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் பாட்டியை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூதாட்டி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மூதாட்டியை , அந்த மாடு தாக்கும் வீடியோ அங்கிருந்தவர்களால் பதிவு செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது இது பரவலாகிவருகிறது.