அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீடியோ காலில் பேசுவதாக சந்தேப்பட்டு மனைவியை கணவன் கொலை செய்து புதைத்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மதுகிரிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும், அஸ்வினி என்ற பெண்ணுக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாட்களாகவே ரமேஷுக்கும், அவரது மனைவி அஸ்வினிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மனைவி மீது சந்தேகம் கொண்ட ரமேஷ், வீடியோ காலில் யாரிடம் பேசுகிறாய் என்று அஸ்வினியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு அவரது சொந்த ஊரான மேனேவுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மேனேவுக்குச் சென்ற ரமேஷ், இனிமேல் சண்டை போடமாட்டேன் எனக்கூறி அஸ்வினியை, வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அஸ்வினிக்கு அவரது பெற்றோர் செல்போனில் பலமுறை தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், வீட்டிற்கு நேரில் சென்று பார்த்தபோது, வீட்டின் பின்புறம் பகுதியில் உள்ள குழியில் அஸ்வினி சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அஸ்வினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக விசாரித்த போது, அறிமுகம் இல்லாத நபர்களுடன் செல்போனில் வீடியோ காலில் அஸ்வினி பேசி வருவதாக ரமேஷ் சந்தேகப்பட்டு அவரை அடித்துக் கொலை செய்து புதைத்து விட்டு தப்பியோடியது தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள ரமேஷை தேடி வருகின்றனர்.