காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், பத்துக்கு மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சிகிச்சை பெற்று வருபவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் என்ற பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று, பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக காஷ்மீருக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருவது தொடரும் நிலையில், இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும், உடனடியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்குமாறு அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சம்பவ இடத்தை நேரில் பார்வையிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக உயர்மட்ட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர், புலனாய்வு பிரிவு மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.