மத்திய பிரதேசத்தில் தன் மீது புகார் கொடுத்த மாமனார் வீட்டிற்கு எதிரே மருமகன் டீ கடை வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவர் தேனீ வளர்ப்புத் தொழிலை செய்து வந்துள்ளார். இவருக்கும் மீனாட்சி என்ற பெண்ணுக்கும் கடந்த 2018ம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது. இருவரும் நன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் ஏற்பட்ட சண்டையில் மீனாட்சி, கிருஷ்ண குமாரிடம் சண்டை போட்டுக் கொண்டு தனது அப்பா வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அதை தொடர்ந்து மீனாட்சி வீட்டார் கிருஷ்ணகுமார் மீது வரதட்சணை புகாரை அளித்துள்ளனர். அதன்பேரில் கிருஷ்ணகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தேனீ வளர்ப்புத் தொழிலை கூட மேற்கொள்ள முடியாமல் காவல் நிலையம், நீதிமன்றம் என அலைந்துள்ளார்.
இதனால் ஒரு முடிவுக்கு வந்த கிருஷ்ணகுமார், நேராக தனது மாமனார் வீட்டிற்கு எதிரே ஒரு டீக்கடையை போட்டுள்ளார். அந்த டீக்கடைக்கு வரதட்சணை கொடுமை குற்றப்பிரிவு ஐபிசி 498 ஏ என்பதையே பெயராக வைத்துள்ளார். அந்த டீக்கடையில் ஒரு கையில் விலங்கு போட்டுக் கொண்டபடியே டீ போட்டு தருகிறார் கிருஷ்ண குமார்.
மேலும் அந்த கடையில் “எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்” என வாசகங்களையும் அவர் அமைத்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்த கடைக்கு கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாம்.
Edit by Prasanth.K