மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கார்போன் பகுதியில் உள்ள ஒரு கடையில் பணம் திருடிய திருடன், கடிதம் ஒன்றை எழுதி விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை நேரத்தில் கடையை திறந்த கடைக்காரர், ரூ.2.4 லட்சம் பணம் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதே நேரத்தில், திருடன் எழுதி வைத்திருந்த ஒரு கடிதமும் அவர் கண்ணில் பட்டது. அந்தக் கடிதத்தில்,
"உங்கள் கடையில் பணத்தை திருடியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு நிறைய கடன் உள்ளது. அந்தக் கடனை நான் செலுத்தாவிட்டால் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே உங்கள் கடையிலிருந்து திருடிய பணத்தை கடனை செலுத்தி விட்டு, ஆறு மாதத்தில் உங்களுக்கு திருப்பி தருவேன்.
கடனை அடைக்க தேவையான அளவு மட்டுமே பணத்தை எடுத்துள்ளேன். மீதமுள்ள பொருட்களை எதையும் எடுக்கவில்லை. ஆறு மாதங்களில் பணத்தை திருப்பிக் கொடுக்கும்போது, நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்.
இப்போது உங்கள் கடையில் திருடியதற்காக இரு கை கூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் விரும்பினால், ஆறு மாதங்களுக்கு பின் நான் பணத்தை திருப்பிக் கொடுக்க வரும் போது, என்னை காவல்துறையிடம் ஒப்படைக்கலாம். அப்போது காவல்துறை தரும் தண்டனையையும் நான் ஏற்றுக் கொள்வேன்."
எனக் குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பாக கடைக்காரர் காவல் துறையில் புகார் அளித்த நிலையில், திருடனை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.