நாளை கும்பாபிஷேகம்.. இன்று வெள்ளி வேல் திருட்டு..மருதமலை முருகன் கோவிலில் பரபரப்பு..!
, வியாழன், 3 ஏப்ரல் 2025 (11:22 IST)
மருதமலை முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் நிலையில், இன்று வெள்ளிவேல் திருடுபட்டதாக வெளிவந்த தகவல் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முருகனுக்கு அறுபடை வீடுகள் தமிழகத்தில் இருக்கும் நிலையில், ஏழாம் படை வீடாக மருதமலை முருகன் கோவில் பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில், நாளை இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மருதமலை அடிவாரத்தில் உள்ள தியான மண்டபத்தில் மூலவருக்கு சுமார் இரண்டரை அடியில் வெள்ளியால் செய்யப்பட்ட, நான்கு லட்சம் மதிப்பிலான வேல் திடீரென காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், 12 மணியளவில் ஒரு சாமியார் அந்த வேலை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், முருகனின் வேல் இன்று காணாமல் போயிருப்பது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இது ஒரு அபசகுணமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நாளை கும்பாபிஷேகத்திற்குள் வெள்ளிவேலை மீட்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்