டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2021-2022ம் ஆண்டு டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது. இந்த முறைகேடு மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறையும் தனது பங்குக்கு வழக்குப்பதிவு செய்தது.
கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது. தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.
கடந்த மே மாதம் 10ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ஜூன் 2ம் தேதி மாலை திகார் சிறையில் சரணடைந்தார். இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும் சிபிஐ அவரை சிறையிலேயே வைத்து மற்றொரு வழக்கில் கைது செய்திருந்தது. இந்த வழக்கில் தற்போது வரை ஜாமீன் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் சிபிஐ பதில் அளிக்க வேண்டும் என்று உத்திரவிட்டது.
சிபிஐயின் கருத்துகளை பெறாமல் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடனே இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.