நாடு முழுவதும் தெரு நாய்கள் விவகாரங்கள் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளை நவம்பர் 7ஆம் தேதி பிறப்பிப்பதாக அறிவித்துள்ளது.
தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தவறியதற்காக, பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, தலைமைச் செயலாளர்கள் ஆஜரானதை பதிவு செய்துகொண்டது. கேரள தலைமை செயலாளரின் விலக்கு கோரும் மனு ஏற்கப்பட்டு, அவரது முதன்மை செயலாளர் ஆஜரானார்.
இந்த வழக்கில் இந்திய விலங்குகள் நல வாரியத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. பெரும்பாலான மாநிலங்கள் தற்போது பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதால், அடுத்த விசாரணையின்போது தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராக தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியது.
எனினும், நீதிமன்ற உத்தரவை அலட்சியமாக கையாண்டதாலேயே தலைமை செயலாளர்கள் நேரில் வர வேண்டிய நிலை ஏற்பட்டது என்று நீதிபதிகள் கண்டிப்புடன் குறிப்பிட்டனர். எதிர்காலத்தில் நீதிமன்ற உத்தரவுகளை சரியாகக் கையாள தவறினால், மீண்டும் அவர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என்றும் எச்சரித்தனர்.
இதையடுத்து, தெரு நாய்கள் விவகாரத்தை கையாளும் விதமாக நவம்பர் 7-ஆம் தேதி கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று சிறப்பு அமர்வு அறிவித்தது.