Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு கொடிய சான்று கோவை வன்கொடுமை சம்பவம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Advertiesment
Coimbatore violence

Prasanth K

, திங்கள், 3 நவம்பர் 2025 (12:19 IST)

கோவையில் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் வன்கொடுமை செய்த சம்பவம் திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு சான்றாக உள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ள அவர் “கோவை விமானநிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த  தனியார் கல்லூரி மாணவியை  3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று  கொடிய முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை  செய்திருப்பது  அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில்  மாணவிகளும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது.

 

பிருந்தாவன் நகரில்  தனியார் கல்லூரி மாணவி  தமது  நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த  3 பேர் கொண்ட கும்பல், அவர்களிடம் தகராறு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து மாணவியும், அவரது நண்பரும் மகிழுந்தில் ஏறி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால்,  அவர்களின் மகிழுந்தை தடுத்து நிறுத்திய கும்பல்,  மகிழுந்தின் கண்ணாடிகளை உடைத்து மாணவியையும், அவரது நண்பரையும் வெளியே இழுத்துள்ளனர். நண்பரைத் தாக்கி காயப்படுத்திய அவர்கள், மாணவியை அங்கிருந்து கடத்திச் சென்று கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியை இன்று காலை அங்குள்ள புதரில் கண்டெடுத்த காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில்  சேர்த்துள்ளனர்.

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு திசம்பர் 23-ஆம் நாள் மனித மிருகத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அந்த அதிர்ச்சி விலகுவதற்கு முன்பே கடந்த ஜூலை 12-ஆம் நாள் திருவள்ளூரை அடுத்த ஆரம்பாக்கம் என்ற இடத்தில் 8 வயது மாணவி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கொடியவனால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இப்போது கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.  திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது.

 

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.தமிழ்நாட்டில் போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின்படி  2024-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 6975 ஆக அதிகரித்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டு இதே சட்டத்தின்கீழ் பதிவான 4581 வழக்குகளுடன்  ஒப்பிடும் போது இது 2394 , அதாவது 52.30% அதிகம் ஆகும்.  இதற்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

 

தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை கட்டுக்கடங்காத அளவுக்கு பெருகியிருப்பது தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும்,  போதைப் பொருள்களின் நடமாட்டத்தை  ஒழிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள்கட்சி  தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

கோவையில் தனியார் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த  மனித மிருகங்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தரமான மருத்துவமும், மனநல ஆலோசனையும் வழங்க  வேண்டும்.  இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் விற்பனைக்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீகார்ல பேசுனதை தைரியம் இருந்தா தமிழ்நாட்டுல பேசுங்க பாப்போம்! - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் சவால்!