நாடு முழுவதும் தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பான வழக்கில் விளக்கம் அளிப்பதற்காக, தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.
இது தொடர்பாகத் தாமாக முன்வந்து விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட், பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய தவறியதால் இன்று அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. காணொலி மூலம் ஆஜராகும் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு, "பல ஆண்டுகளாகச் சரி செய்திருக்க வேண்டிய இந்த பிரச்சினைக்காக நீதிமன்றம் தனது நேரத்தை வீணடிப்பது துரதிருஷ்டவசமானது. நீதிமன்ற உத்தரவில் மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவதால், அனைவரும் நேரில் வந்து விளக்கம் தர வேண்டும்," என்று கடுமையான கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் ஆஜராகியுள்ளார்.