ஆந்திர மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பரப்புரைக்காக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்று இருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் திடீரென அவர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவரது கட்சியினர் சந்திரபாபு நாயுடுவை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் இதனால் பரப்புரை ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, கல் வீசியவர்கள் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ரவுடிசம் அதிகரித்து விட்டதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி என்றும், தைரியமிருந்தால் நேருக்கு நேர் வந்து மோதுங்கள் என்றும் கூறினார்.
முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாய்டு இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்தும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது