ஹைதராபாத்தில் நேற்று ஒரு வீட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு, 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில் அந்த எலும்புக்கூடு அமீர் கான் என்பவருடையது என்று போலீசார் தெரிவித்தனர்.
நம்பள்ளியில் உள்ள முனீர் கான் என்பவருக்கு சொந்தமான அந்த வீட்டில், ஒரு பழைய நோக்கியா மொபைல் ஃபோன் மற்றும் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. முனீருக்கு 10 குழந்தைகள் இருந்ததாகவும், அவரது மூன்றாவது மகன் - அமீர் - அந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், மற்றவர்கள் வேறு இடத்திற்கு சென்றுவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
நேற்று தவறி விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க வீட்டிற்குள் நுழைந்த ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியானதையடுத்து, இந்த எலும்புக்கூடு வெளிச்சத்திற்கு வந்தது. அந்த வீடியோவில், தரையில், எலும்புக்கூடு குப்புற படுத்திருப்பது காணப்பட்டது. மனித எலும்புக்கூட்டைச் சுற்றி பல பாத்திரங்களும் சிதறிக் கிடந்தன.
இதுகுறித்து உதவி ஆணையர் கிஷன் குமார் கூறுகையில், பேட்டரி பழுதடைந்திருந்த அந்த போன், எலும்புக்கூடு அமீருடையது என்பதை உறுதிப்படுத்தியது. போனை பழுதுபார்த்து சரிசெய்தபோது, 2015 ஆம் ஆண்டில் 84 மிஸ்டு கால்கள் பதிவாகி இருந்தன.
"அந்த நபர் சுமார் 50 வயதுடையவர், தனியாக வசித்தவர், மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர் 10 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டதல், எலும்புகள் கூட நொறுங்க தொடங்கிவிட்டன. எந்தவித போராட்ட அறிகுறிகளோ அல்லது ரத்தக் கறைகளோ நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. இது ஒரு இயற்கையான மரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்
போனைத் தவிர, மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளும் ஒரு தலையணைக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டன. எனவே இது, 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முந்தைய மரணத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த, மனித எலும்புக்கூடு உடற்கூறு ஆய்வுக்காக சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.