உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடல் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை தேசத்தின் மீதான மரியாதையையும், பெருமையுணர்வையும் மாணவர்களிடையே வளர்ப்பதை நோக்கமாக கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
கோரக்பூரில் நடந்த நிகழ்வில் பேசிய யோகி ஆதித்யநாத், "தேசிய பாடலான வந்தே மாதரத்தின் மீது மரியாதை இருக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்வி நிறுவனத்திலும் அதை கட்டாயமாக்குவோம்," என்று உரையாற்றினார்.
வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த சில நாட்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்காளக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி நவம்பர் 7, 1875 அன்று வந்தே மாதரம் பாடலை இயற்றினார். "வந்தே மாதரம் இந்தியாவின் ஒற்றுமையின் உண்மையான சின்னமாகும்" என்று பிரதமர் மோடி இந்த நிகழ்வில் குறிப்பிட்டிருந்தார்.