இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ஷ்ரேயாஸ் ஐயர், தனது வீட்டில் தனது தாயாருடன் விளையாடிய கிரிக்கெட் விளையாட்டு தருணத்தை சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
வீட்டிற்குள்ளேயே கிரிக்கெட் விளையாடிய நிலையில் அவரது அம்மா பந்துவீச, அவர் ஒரு பந்தை அடிக்க தவறியதும், இரண்டாவது பந்தில் க்ளீன் போல்டு ஆன வீடியோவை ஷ்ரேயாஸ் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பஞ்சாப் கிங்ஸ் அணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேடிக்கையான கருத்துடன் பகிர்ந்தது, இணையத்தில் ரசிகர்கள் அதை மேலும் கேலி செய்தனர்.
"பஞ்சாயத்துத் தலைவர் அவுட்டானால் கூட கவலைப்படாத ஒரே தருணம் இதுதான்," என்று ஷ்ரேயாஸ் ஐயர் தனது அம்மா வீசிய பந்தை அடிக்க தவறியதைக் குறிப்பிட்டு, பஞ்சாப் கிங்ஸ் தங்கள் அதிகாரப்பூர்வ 'X' பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டிருந்தது. இந்தக் கலகலப்பான வீடியோவை இணைய ரசிகர்கள் மேலும் வேடிக்கையாக கருத்து தெரிவித்தனர்.
"ஒரு பவுன்சரும், அதைத் தொடர்ந்து ஒரு யார்க்கரும் வீசினால், விக்கெட் கிடைக்கும்," என்று ஒரு ரசிகர் கலகலப்பாகக் கருத்து தெரிவித்தார்.
"அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு வருவாரா? என்று மற்றொரு ரசிகர் கேட்டார்.
"இரண்டாவது பந்து அவ்வளவு கச்சிதமான இடத்தில் இருந்தது, அதை நீங்கள் பாராட்டத்தான் வேண்டும்," என்று மூன்றாவது ரசிகர் ஒரு கருத்து தெரிவித்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அடுத்ததாக, ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான இந்தியாவின் ஒருநாள் தொடரில் அவர் இடம்பெற வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது